லாலாபேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 7 வயது சிறுவன் பலி
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 7 வயது சிறுவன் பலியானான். அவரது தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மோதி சிறுவன் பலி
கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம் அருகே உள்ள கம்மநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவரது மகன் ஹார்திக்ராஜ் (7). இந்தநிலையில் சதீஷ்குமார் தனது மகன் ஹர்திக்ராஜை சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு திருச்சி-கரூர் தேசியநெடுஞ்சாலையில் மகாதானபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தனர். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை அருகே உள்ள மணவிடுதி பகுதியை சேர்ந்த
ரஞ்சித் (48) என்பவர் ஓட்டி வந்த லாரி, அங்கிருந்த மினி வேன், மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த ஹார்திக்ராஜ், சதீஷ் ஆகியோர் மீது மோதியது. இதில் ஹார்த்திக்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
2 பேர் படுகாயம்
சதீஷ்குமார் மற்றும் மினி வேன் டிரைவரான பழைய ஜெயங்கொண்டம் ஓமாந்தூர் பகுதியை சேர்ந்த விஜய குமார் (27) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த சதீஷ்குமார், விஜய குமாரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹார்திக்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
வெள்ளியணை அருகே
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
வெள்ளியணை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்து விட்டார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பகுதியில் உள்ள கரூர்- திண்டுக்கல் ரெயில் தண்டவாளத்தில் 18 வயது வாலிபர்
ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்துகிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது கல்லுமடையை சேர்ந்த ராமன் மகன் சந்தனகுமார் (வயது 19) என்பதும், அவர்
ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தபோது, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு
இதையடுத்து சந்தனகுமாரின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து இது விபத்துதான இல்லை அவர் தற்கொலை ஏதும் செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.