இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
பீகார் மாநிலம் பகுசராய் நகரை சேர்ந்தவர் அவினாஷ் பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது லகிசராய் ஊரை சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் ஊரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு படிக்க வந்தார்.
அப்போதுதான் அவினாசை சந்தித்து பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் நான்கு வருடங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர். அவினாஷ் குஞ்சத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிவந்துள்ளார்.
அரசு ஆசிரியர்
இந்தநிலையில் தகுதித்தேர்வில் வெற்றிபெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார். அப்போது தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் காதலி குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இந்த சம்பவம் குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக் கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 கார்கள் அவினாசை வழிமறித்தன. பிறகு அவரை காருக்குள் ஏற்றி கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.
அங்கு முன்னதாகவே தயாராக இருந்தார் காதலி குஞ்சம் உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தை பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவினாஷின் கால்களை கயிற்றால் கட்டிய சொந்தகாரர்கள் இருவருக்கும் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர். அருகே இருந்த குஞ்சம் அழுது துடித்தார். சினிமா காட்சிகளை மிஞ்சிய இந்த கல்யாணம் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவினாஷ் வீட்டிற்கு சென்றனர் குஞ்சத்தை பார்த்த அவினாஷின் பெற்றோர் ஏற்க மறுத்து அவர்களை துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
மற்றொரு சம்பவம்
பள்ளி வளாகத்தில் இருந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
அருணாசலப்பிரதேச மாநிலம் நகர்ல குன் நகரில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பாடம் வரை எடுக்கப்பட்டு வந்தது. மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பிரபலமான பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி இயங்கியது. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து வகுப்பில் பாடம் கற்று வந்தனர். அப்போது 9-ம் வகுப்பு மாணவர்கள் உடற்கல்வி வகுப்புக்காக பள்ளி மைதானத்திற்கு வந்தனர்.
3 மாணவர்கள் சாவு
மைதானத்தில் அவர்கள் ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாக கட்டிடத்தின் 4-வது மாடியில் கட்டப்பட்டிருந்த குடிநீர் தேக்க தொட்டி இடிந்து கீழே விழுந்தது. இதனிடையே மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பாகங்கள் விழுந்தன. இதில் தலையில் படுகாயம் அடைந்து 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பள்ளி உரிமையாளர், முதல்வர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் பள்ளிக்கு 'சீல்' வைத்து மூடினர்.பள்ளியில் மூன்று மாணவர்கள் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.