தமிழகம் 'பெஞ்ஜல்' புயல் பாதிப்பை சந்தித்து வரும் வேளையில் தனியார் பால் நிறுவனங்கள் திடீரென்று பால் விலையை உயர்த்தி உள்ளது.
தனியார் பால் விலை
பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம் போன்ற கார ணங்களை கூறி, ஆரோக்யா பால் நிறுவனம் கடந்த மாதம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால்
விலையை உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. பெஞ்ஜல் புயல் பாதிப்பை தமிழகம் சந்தித்துள்ள வேளையில் தனியார் பால் உயர்வு வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் செயல் என்று பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா வது சென்னை பெருநகரின் தினசரி பால் தேவையில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேல் மிகப்பெரிய வணிகச் சந்தையை கொண்டுள்ள அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தும் அறிவிப்பை சுற்றறிக்கை வாயிலாக பால் முகவர்களுக்கு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
'பெஞ்ஜல்' புயல் பாதிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் புதிய விற்பனை விலையை இந்த நிறுவனங்கள் அமல்படுத்தி உள்ளன.
அதன்படி ஒரு லிட்டருக்கு ரூ.2-ம். அரை லிட்டருக்கு ரூ.1-ம் விலை உயர்ந்துள்ளது. சீனிவாசா பால் நிறுவனம் நாளை முதல் பால் விலையை உயர்த்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
''ஹெரிடேஜ்' நிறுவனம் பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் பாக்கெட் அளவை குறைத்துள்ளது. மேலும் சமன்படுத்தப்பட்ட பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை நேரடியாக உயர்த்தியுள்ளது.
தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி பால் கொள்முதல் விலையில் எந்த ஒரு விலை உயர்வு மாற்றங்களும் இல்லை ஆனால் பால் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் தன்னிச்சையாகவும் அனைத்து தனியார் நிறுவனங்களும் உயர்த்தியதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தனியார் பால் நிறுவனங்களின் பால்கொள்முதல் மற்றும் விற்பனை விலையை வரன்முறைப்டுத்தி, கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை
தனியார் பால் நிறுவனங்கள் திடீரென்று விலையை உயர்த்தி இருந்தாலும், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்த வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.