ரயில் பயணியிடம் ₹75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் திருச்சியில் பரபரப்பு
ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ₹75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேவகோட்டையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரயில்களில் கஞ்சா. புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலும் இரவு நேரங்களில் வரும் ரயில்களில் கடத்தி வருகின்றனர்.
இதை தடுக்க இரவு நேரங்களில் வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை வழியாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலில், ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றவியல் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த ரயிலிலிருந்து சந்தேகப்படும் படி கருப்பு பேக்குடன் அங்கிருந்து ஒருவர் இறங்கி
![]() |
பிளாட்பார்ம் நம்பர் 6ல் உள்ள சுரங்கப்பாதை வழியாக வேகமாக சென்றார்.
இதையடுத்து போலீசார் பின் தொடர்ந்து சென்று அந்த பயணியை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (49) என்பதும், அவரது பேக்கில் சோதனையிட்டபோது ₹500, ₹200 கட்டுக்கட்டாக ₹75 லட் சம் இருந்ததும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹாவாலா பணம் என தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ஆரோக்கியதாஸை கைது செய்து அவரிடமிருந்த ₹75 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
வருமானவரித்துறை துணை இயக்குநர் முன்னிலையில் வருமான வரித்துறையினரிடம் நேற்று காலை ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருமானத்துறை அதிகாரிகள், பணத்தை கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் ஒப்படைக்க எடுத்து சென்றார் என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தினர்.
மற்றொரு சம்பவம்
டாக்டரை தாக்கி மருத்துவமனையை சூறையாடிய இருவர் கைது
நேரில் வந்து கொரியர் தராததால் ஆத்திரம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் முகமது (45). இவர் துவாக்குடியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். மேலும், அதில் (எஸ்டி கொரியர்) தனியார் கொரியர் வைத்தும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் துவாக்குடி வாழவந்தான் கோட்டை நியூபர்மா காலனியை சேர்ந்த பிரதீப் (43) என்பவருக்கு பார்சல் பெரிதாக வந்துள்ளது. இதனால் பார்சலை எடுத்து வந்து கொடுக்க முடியாது, அதனால் தாங்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அவரது செல்போனில் தொடர்பு கொண்டு முகமது கூறியுள்ளார். அதற்கு "நேரடியாக வந்து பார்சலை கொடுக்க முடியாதா, நான் யாருன்னு நேரில் வந்து காட்டுகிறேன்" எனக் கூறி மருத்துவமனைக்கு அவனது நண்பனான வாழவந்தான் கோட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கலைவாணன் (28) என்பவனுடன் வந்து முகமதுவை ஆபாச வார்த்தையால் திட்டியதோடு மருத்துவமனை பொருட் களை அடித்து சேதப்படுத்தியதோடு, முகமதுவின் அடிபட்டிருந்தகாலில் எட்டி உதைத்து கொரியரைப் பெற்று சென்றனர். மேலும், இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த டேங்கர் லாரியின் டிரைவர் இளங்கோவன் என்பவரையும் தாக்கி உள்ளனர்.
இது சம்பந்தமாக முகமதுதுவாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் மற்றும் கலைவாணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.