திண்டுக்கல் அருகே பயங்கரம்
கை, கால்களை கட்டிப்போட்டு நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை கண்களை சிதைத்த கொடூரம்
திண்டுக்கல் அருகே, கை, கால்கள் கட்டப்பட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கண்களையும் மர்மநபர்கள் சிதைத்தனர்.
நிதி நிறுவன ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39). அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களுக்கு, அந்த நிறுவனத்தில் கடன் பெற்றுத்தரும் பணியை இவர் மேற்கொண்டு வந்தார். அவருடைய மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 8 மாதபெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 6-ந்தேதி பாலமுருகன் வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் பாலமுருகனை தேடிப்பார்த்தனர் ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து சின்னாளப் பட்டி போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் அளித்தார் அதன்பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வந்தனர்
கொடூரக்கொலை
இந்த நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்குவழிச்சாலையில், திண்டுக்கல்லை அடுத்த தோமையார்புரம் அருகே சாலையோர புதருக்குள் ஆண்பிணம் கிடந்தது தெரியவந்தது. கை,கால்கள் கட்டப்பட்டு,கண்கள் துணியால் சுற்றப்பட்ட நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் அந்த நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று இறந்தவரின் உடலை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து கண்களில் சுற்றப்பட்டிருந்த துணியை போலீசார் அகற்றி பார்த்தனர். அப்போது இறந்தவரின் 2 கண்களும் உருக்குலைந்து இருந்தது. இதேபோல் அவருடைய கழுத்து, மார்பு, கை தலை என உடல் முழுவதும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டிருந்ததைகண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரை மர்ம நபர்கள் கால்களை கட்டி கடத்தி வந்து கொடூரமாகவெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
கண்ணீ விட்டு கதறல்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாயமான நிதி நிறுவன ஊழியர் பால முருகன் என்பது தெரியவந்தது.
இதுபற்றி பாலமுருகனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து பாலமுருகன் உடலை பார்த்து சுதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பாலமுருகன் எதற்காக கொலை செய்யப்பட்டார். என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.