பெண்ணின் தலை தனியாக கிடந்ததால் மதுரையில் பரபரப்பு
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் கீழே பெண்ணின் தலை மட்டும் கிடந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நாயால் இதில் உள்ள மர்மம் விலகியது.
பெண்ணின் தலை கிடந்தது
மதுரை திருப்பாலை நாகனாகுளம் கண்மாய் பூங்கா அருகே, நத்தம் பறக்கும் சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் நேற்று காலை ஒரு பெண்ணின் தலை கருகிய நிலையில் தனியாக கிடந்தது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீசார், அந்த தலையை மீட்டு பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலை தனியாக கிடந்ததால் கொடூர கொலை நடந்ததா? என்ற கோணத்தில் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அக்கம்பக்கத்தில் உடலை தேடினர்.
மர்மம் விலகியது
இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த நாய் இந்த தலையை கவ்வி வந்து போட்டது தெரியவந்ததால் இதிலஉள்ள மர்மங்கள் விலகதொடங்கின. இதனை தொடர்ந்து அருகில் இருந்த மயானங்களில் உள்ள பணியாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். காலை முதல் மாலைவரை நடந்த பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் சாலையில் கிடந்த தலை யாருடையது என்பதை போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், முதற்கட்டமாக தடயங்களின் கிடைத்த தட அடிப்படையில் அடிப்படையில் சாலையில் கிடந்தது ஒரு மூதாட்டியின் தலை ஆகும். நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள்(வயது 70) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை அந்த பகுதியிலுள்ள
மயானத்தில் எரியூட்டிய போது, மழை பெய்ததால் குடும்பத்தினர் பாதியில் வீட்டுக்கு சென்றுள்ளனர். மயான ஊழியர்களின் கவன குறைவால் பாதி எரிந்த நிலையில் கிடந்த தலையை நாய் ஒன்று வாயில் கவ்வி எடுத்து சென்று, நேற்று அதிகாலையில் பாலத்தின் கீழே உள்ள சாலையில் போட்டுவிட்டு சென்றது சி.சி.டி.வி. கேமராவில் தெரிய வந்தது. இருப்பினும், மூதாட்டியின் தலை உள்ளிட்ட சில பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.