ஒன்றறை மாத பெண் குழந்தை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை
தந்தை உட்பட 4 பெண்கள் போலீசாரால் கைது
நாகர்கோவில் தம்பதிக்கு 1 1/2 மாத பெண் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக தந்தை, இடைத்தரகர்களாக செயல்பட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பெண் குழந்தை
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 28). கணவருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வசித்து வந்தார். பின்னர் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்து பஸ் நிலையம் பகுதியில் தங்கி இருந்தார். அப்போது ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா 5 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால் சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதை விற்று விடலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நித்யாவுக்கு - பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து சந்தோஷ் குமார் தனது குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக அவர் இடைத்தரகர்களை நாடினார். அப்போது ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த செல்வி (47), எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த ராதா (39), ரேவதி (35), லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த சித்திக்கா பானு (39) ஆகியோர் சந்தோஷ்குமாருக்கு அறிமுகமாகி உள்ளனர்.
ரூ.4 லட்சத்துக்கு விற்பனை
இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரும், பெண் இடைத்தரகர்கள் 4 பேரும், நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்த பெண் குழந்தையை நாகர்கோவிலைசேர்ந்த தம்பதியிடம் விற்று உள்ளனர்.
பிறந்து 1 1/2 மாதங்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்துள்ளார். இதனால் நித்யா நடந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட குழந்தை நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் குழந்தைகள் நலக்குழு அதிகாரி . இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
5 பேர் கைது
அதன்பேரில் போலீசார் நித்யாவிடம் தீவிர விசா ரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து. நித்யாவுடன் இணைந்து வாழ்ந்த சந்தோஷ் குமார் மற்றும் இடைத்தரகர்களான செல்வி,ராதா, சித்திக்கா பானு, ரேவதி ஆகிய 5 பேரையும் நேற்று கைது செய்தனர். இதற்கிடையில் உடல்நலக்குறைவால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தாயான நித்யாவையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.அவர்கள் அளிக்கும் தகவலின் பேரில் தான், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ரூ.4 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.